முன்னாள் பிரதமர் சந்திரசேகர் குறித்த புத்தகத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், "முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மறைந்து 12 ஆண்டுகள் ஆன போதிலும் அவரின் எண்ணங்கள் தொடர்ந்து நமக்கு வழி காட்டுகின்றன.
1977ஆம் ஆண்டு முதல்முறையாக டெல்லி விமான நிலையத்தில் வைத்து சந்திரசேகரை சந்தித்தேன். அப்போது பைரோன்சிங் செகாவத்தும் உடனிருந்தார். அவர்கள் இருவரும் அரசியல் ரீதியாக வெவ்வேறு கருத்துகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் மிகுந்த நட்புடன் இருந்தனர்.
சந்திரசேகர் ஓரங்கட்டப்பட்ட விவசாயிகளுக்காக பாதயாத்திரை மேற்கொண்டார். அவரின் அந்தப் பயணத்தை நாம் மதிக்கவில்லை. அவர் தனிப்பட்ட கொள்கையை கொண்டவர். காங்கிரஸ் கட்சி உச்ச நிலையில் இருந்தபோது அந்தக் கட்சியின் சில கொள்கைகளை எதிர்த்தார்.
அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை குருஜி என குறிப்பிடுவார். அவரை சந்திக்கும் நேரங்களில் குஜராத்தின் வளர்ச்சி குறித்து கேட்டார். மேலும் பல தேசிய பிரச்னைகள் குறித்த தனது முன்நோக்கிய சிந்தனையை என்னுடன் அவர் பகிர்ந்துகொண்டார். அவருடனான தொடர்பு, சிந்தனையின் தெளிவை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.
இதற்கு முன்பு ஆட்சி செய்த முன்னாள் பிரதமர்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிரதமர்களின் வாழ்க்கை முறை குறித்து அவரவர் குடும்பத்தினர் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.