சிம்லா: முன்னாள் ஆளுநர், சிபிஐ இயக்குனர் அஸ்வனி குமார் (புதன்கிழமை) சிம்லாவில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
69 வயதான அஸ்வனி குமாரின் மரணம் தற்கொலையாக இருக்கும் என காவலர்கள் சந்தேகிக்கின்றனர். எனினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இந்தச் சம்பவம் குறித்த கேள்விபட்டதும் இமாச்சலப் பிரதேசத்தின் காவல்துறை தலைவர் சஞ்சய் காண்டு, சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
மேலும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து, அங்கிருக்கும் தடயங்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இது குறித்து ஒய்வு பெற்ற முன்னாள் காவல் அலுவலர் ஏ.பி. சிங் கூறுகையில், “எனக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. நான் சிறப்பு இயக்குனராக பணியாற்றிய போது, அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன்.
அவர் ஒரு நல்ல மனிதர். ஒருபோதும் தன்னிலையை (கோபம்) இழக்க மாட்டார். பண்பாக பேசுவார், சிறந்த முறையில் நடந்துகொள்வார். ஒருபோதும் யாரிடமும் குரலை உயர்த்தி பேச மாட்டார்” என்றார்.
அஸ்வனி குமார் 1973ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்தார். 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2010ஆம் ஆண்டுவரை சிபிஐ இயக்குனராக பொறுப்பு வகித்தார்.