கரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் பொருளாதாரப் பிரச்னைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ''கரோனா வைரஸால் நாடு முழுவதும் பொருளாதாரப் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. கண்ணாடி, பித்தளை, நெசவு, தோல், பால், மண்பண்டங்கள், மீன் பிடிப்பு என அனைத்து சிறு குறு தொழில்களும் பாதிப்பை சந்தித்துள்ளன.
இந்தப் பொருளாதார சுனாமியை சரிசெய்வதற்காக மாநில அரசு உடனடியாக பொருளாதார வல்லுநர்களைக் கொண்டு ''பொருளாதார புனரமைக்குக் குழு'' ஒன்றை அமைக்கவேண்டும். அந்தக் குழுவினர் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான திட்டத்தை உடனடியாக வகுக்கவேண்டும்.
இந்த கரோனா வைரஸ் சமூகத்தின் அத்தனை பிரிவினரையும் பாதித்துள்ளது. இதனால் சமூகத்தில் உள்ள பொருளாதாரம் மற்றும் அடிப்படை பிரச்னைகளை சரிசெய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.