பரதந்த் கிராமம்
ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியிலிருந்து 141 கிலோமீட்டர் தொலைவில் பரதந்த் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராம மக்கள் காட்டு விலங்குகள் அருந்தும் தண்ணீரை குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர். இது கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாகத் தொடர்கிறது. மக்களவைத் தேர்தலில் வாக்கு கேட்க வந்தவர்கள் பல வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ளனர். அதில் பரதந்த் கிராமத்துக்கு குடிக்க தண்ணீர் கொடுப்போம் என்பதும் ஒரு வாக்குறுதி.
குடிநீர் பஞ்சம்
இது அரசியல்வாதிகளுக்கு வெற்றியை கொடுத்தது. ஆனால் வழக்கம்போல், பரதந்த் கிராம மக்களுக்கு ஏமாற்றம்தான். குடிக்கத் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யுங்கள் என கிராம மக்கள் தேர்தலில் வெற்றிபெற்ற அரசியல்வாதிகளிடம் கேட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பேசிவருகிறோம். நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி என்பதால் நடவடிக்கை எடுக்கத் காலதாமதம் ஏற்படுகின்றது என சப்பைக்கட்டு கட்டுகின்றனர்.
இது குறித்து அக்கிராமவாசி ஊர்மிளா தேவி என்பவர் கூறும்போது, கிராமத்தில் அடிகுழாய் உள்ளது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை. இது குறித்து பலமுறை அலுவலர்கள், அரசியல்வாதிகளிடம் பேசி எந்தப் பலனும் இல்லை. உயிர் வாழ வேண்டுமே என்று கிராம மக்கள் அசுத்தமான குடிநீரைக் குடிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கை தீங்குகளின் கூடாரமாகிறது என்றார் சோகமாக.
நிலவில் தண்ணீர் ஆராய்ச்சி
இதனை நமது ஈடிவி பாரத் பஞ்சாயத்து தலைவரின் கவனத்துக்கு கொண்டுசென்றது. தற்போது அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்க உடனடியாக வழிவகை செய்வதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா கடந்த பத்து ஆண்டாக பல்வேறு வளர்ச்சியை எட்டியுள்ளது.
விலங்குகள் குடிக்கும் தண்ணீரை அருந்தும் கிராம மக்கள் பல ஆயிரம் கோடி செலவழித்து நிலவில் தண்ணீர் இருக்கிறதா? கிடைக்குமா? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்கிறோம். ஆனால் உள்நாட்டில் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் எத்தனையோ மக்கள் அவதிப்படுக்கின்றனர். இதெல்லாம் நாட்டின் அடையாளம் அல்ல; அவமானம்! மதிகெட்ட மாந்தரே இந்நிலை மாற வேண்டாமா?