இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளைப் பாதுகாப்பு மண்டலங்களாகப் பிரித்து, அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தலைநகர் டெல்லியில் நிஜாமுதீன் உள்பட 100க்கும் மேற்பட்ட பாதுகாப்பு மண்டலங்கள் உள்ளன. நிஜாமுதீன் சோதனைச் சாவடியில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ரயில்வே பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் உள்ள வீரர்களுக்கு கரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக, அவர்கள் காலால் இயக்கப்படும் சானிடைசர் இயந்திரத்தை நிறுவியுள்ளனர். காலால் பெடல்களை மிதிக்கும்போது, அதிலிருந்து கைகளைச் சுத்தப்படுத்தும் சானிடைசர் சிறிது வெளியேறும். அதனைக்கொண்டு கைகளை சுத்தப்படுத்திக்கொள்ளலாம். இதன்மூலம், நாட்டிலேயே நிஜாமுதீன் சோதனைச் சாவடியில் தான் முதன்முறையாக காலால் இயக்கப்படும் கிருமி நாசினி இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
காலால் இயக்கப்படும் சானிடைசர் இயந்திரம்! இது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் கிருஷ்ணன் கூறுகையில், "நாங்கள் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு அளித்தும் அவர்களுக்கு உதவி செய்தும் வருகிறோம். அதனால், எங்களது வீரர்களுக்கு கரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது. அதற்காக, எங்கள் வீரர்கள் தேவையற்ற பொருள்களைக் கொண்டு, காலால் இயக்கப்படும் சானிடைசர் இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
இவற்றில் இரண்டை எங்கள் சோதனைச் சாவடி வெளியே வைத்துள்ளோம். அதில் ஒன்று, ஊழியர்கள் தங்களது கைகளை எதையும் தொடாமலேயே கைகளை கழுவ வேண்டும் என்பதற்காகவும், மற்றொன்று அவர்களின் உடலில் கிருமி நாசினியைத் தெளிப்பதற்காகவும் இந்த இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது" என்றார்.
இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை, ஐ.ஆர்.சி.டி.சி, சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து தேசிய தலைநகர் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் தினமும் சுமார் 11,500 ஏழை மக்களுக்கு உணவு விநியோகித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:துபாயில் கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி கதவு!