நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் நேற்று பேசிய திமுக மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு ஜிபிஎஸ் கருவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அப்போது பேசுகையில், '' உலகிலேயே இரண்டாவது பெரிய அளவில் மீன் பிடி தொழில் செய்யும் நாடு இந்தியா. கிட்டத்தட்ட 7 ஆயிரம் கி.மீ அளவில் கடல் கரையோரம் மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். 40 லட்சத்திற்கும் மேல் மீனவர்கள் உள்ளனர்.
என்னுடைய தொகுதி வடசென்னை என்பது கடலோர தொகுதியாகும். என் தொகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 10 நாள்கள் மீன்பிடிப்பதற்காக ஆழ்கடல் சென்றனர். ஆனால் எதிர்பாராவிதமாக 10 நாள்கள் என்பது 2 மாதங்களாக மாறியது.
அவர்களை கண்டறிவதில் பல சிரமங்கள் ஏற்பட்டன. கடைசியாக மியான்மர் நாட்டு கப்பல் மூலம் உதவி கோரி வீடு திரும்பினர். ஆனால், முன்னதாக இதேபோல் காணாமல் போன ஏழு மீனவர்கள் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மீனவர்களுக்காக பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அவர்களின் பாதுகாப்பிற்கு அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள மீனவர்கள் சந்திக்கும் பிரச்னை.
இதனால் அவர்கள் காணாமல் போனால் அவர்களை கண்டறியும் வகையில் மீனவர்களின் கப்பல்களில் ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்த மீன்வளத்துறை அமைச்சகம் சார்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க:உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பன்முகத்தன்மை இல்லை - திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன்!