கரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசும் பல்வேறு தளர்வுகளை அறிவித்துவருகிறது. பல கல்லூரிகளில் புதிய மாணவர்களைச் சேர்க்கும் பணி ஆன்லைனில் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வகுப்புகள் தொடங்கப்படுகிறது என்றும், அதற்கான கால அட்டவணையும் யுஜிசி தயாரித்து மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றுள்ளது.
அதன்படி, "மாணவர் சேர்க்கைக்கான பணிகள் அனைத்தும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். நவம்பர் 1ஆம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். மார்ச் 8 முதல் 26ஆம் தேதி வரை முதல் செமஸ்டர் தேர்வு நடைபெற வேண்டும்.
ஏப்ரல் 5ஆம் தேதி அடுத்த செமஸ்டர் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். ஏப்ரல் 9 முதல் 21-ம் தேதி வரை இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடைபெற வேண்டும். ஒருவேளை, கல்லூரி நுழைவுத்தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில், முதலாமாண்டு வகுப்புகளை நவம்பர் 18ஆம் தேதி தொடங்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கரோனா தொற்றுக்காக விடப்பட்ட விடுமுறைகளை சரிகட்டும் வகையில், இந்த கல்வியாண்டில் வாரத்துக்கு 6 நாட்கள் கல்லூரி வகுப்புகள் நிச்சயம் நடத்திட வேண்டும். ஆண்டுதோறும் விடப்படும் குளிர்கால மற்றும் கோடை கால விடுமுறைகள் ஏதும் இல்லாமல் கல்லூரியை தொடர்ந்து நடத்திடவும் உத்தரவிட்டுள்ளது.