இந்தியாவில் தீவிரமடைந்துள்ள கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களது வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்த தீடீர் ஊரடங்கு உத்தரவால் திட்டமிட்டிருந்த பல திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் தனிநபர் விலகல் கடைப்பிடிக்கப்பட்டு எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் எளிய முறையில் திருமணங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், ஏப்ரல் 18ஆம் தேதி கன்னட தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் பிரமாண்டமாக திருமண விழா நடத்தியுள்ளார். இவ்விழாவில் 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி அங்கு திருமணம் நடந்ததாக அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவலளித்தனர். இதன் அடிப்படையில் காவல்துறையினர் திருமண விழா நடத்திய தொலைக்காட்சி தொகுப்பாளர் மீது இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.