காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவார் என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தனது பாரம்பரியத் தொகுதியான அமேதி தொகுதியுடன் சேர்த்து வயநாட்டிலும் ராகுல் போட்டியிடும் காரணம் குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். தென்மாநிலங்களில் காங்கிரஸின் பலத்தை அதிகரிக்கும் யுக்தியாகவே காங்கிரஸ் இம்முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சி வட்டாரத்தினர் கூறிவருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சியினரான பாஜக தரப்பிலோ அமேதியில் தோல்வி பயம் காரணமாகவே பாதுகாப்பு கருதி ராகுல்காந்தி வயநாடு தொகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளார் எனக் கூறிவருகிறது.
'தோல்வி பயத்தில் கேரளாவுக்கு ஓடிய ராகுல்' - அமித் ஷா விமர்சனம்
லக்னோ: அமேதி தொகுதியில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரளாவில் போட்டியிடவுள்ளார் என பாஜக தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், தனது முதல் மக்களவைத் தேர்தலைச் சந்திக்கும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உத்ரபிரதேச மாநிலம் பிஜினோர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர், ராகுல் காந்தி அமேதியை விட்டுவிட்டு கேரளாவுக்கு ஓடிவிட்டதாக வாட்ஸ்ஆப்பில் படித்தேன். அவர் ஏன் தப்பி ஓடும் முடிவை எடுத்துள்ளார், அவர் அமேதி தொகுதிக்கு என்ன செய்துள்ளார் என்பது மக்களாகிய உங்களுக்குத் தெரியும். எனவே தோல்வி பயம் காரணமாக ராகுல் இம்முடிவை எடுத்துள்ளார். வாக்குவங்கி அரசியலைப் பயன்படுத்தி கேரளாவில் வெற்றிபெறும் எண்ணத்தில் இருக்கிறார் ராகுல் எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
அதுபோல உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத், காங்கிரஸ் தனது செயல்களுக்கு உரிய தண்டனையை நிச்சயம் பெரும். அமேதி தொகுதி மக்கள் ராகுலுக்கு நிச்சயம் பதிலடி தருவார்கள். அந்த பயம்தான் ராகுலை தொகுதி மாறும் முடிவுக்குத் தள்ளியுள்ளது எனக் கூறியுள்ளார்.