ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி தொடர்பான விசாரணைக்காக, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா இன்று அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஆஜரானார். பணமோசடி தொடர்பான விசாரணைக்கு இவர், இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக ஆஜராகியுள்ளார். முன்னதாக இதுதொடர்பாக அக்டோபர் 19ஆம் தேதி ஆறு மணி நேரத்திற்கும் மேலாக இவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த திங்கள் கிழமை நடந்த விசாரணையைத் தொடர்ந்து அவர், தான் எதற்கும் அஞ்சப்போவதில்லை என்றும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த விசாரணையில் அளிக்கும் விளக்கங்கள் அனைத்தும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கடந்தாண்டு ஜூலை மாதத்தில் சண்டிகரில் வைத்து இவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அமலாக்கத்துறையின் நடவடிக்கையை தேசிய மாநாட்டுக் கட்சி விமர்சித்துள்ளது. கேள்வி கேட்பவர்களின் குரல்வலையை நெறிப்பதற்காகவே பரூக் அப்துல்லாவை ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக குற்றஞ்சாட்டியது.