புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சட்டப்பேரவை குழு அறையில் நிதிநிலை அறிக்கை சம்பந்தமாக அமைச்சர்கள், விவசாயச் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் புதுச்சேரி மாநில கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜெயராமன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அரசுக் கூட்டுறவுச் சங்க ஆலையை திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்
புதுச்சேரி: மூடப்பட்டுள்ள அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அப்போது பேசிய அவர் ’புதுச்சேரியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை, அரசு லிங்கா ரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இரண்டும் தற்போது இயங்கவில்லை. அதனை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் கடுமையான வறட்சியில் வாடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில், கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 200 ரூபாய் எனக் கடந்த 2017-2018ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் அனைத்துப் பகுதிகளும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே ஒருங்கிணைந்த இழப்பீடு அனைவருக்கும் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்’ என்றார்.