2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த இந்து - முஸ்லிம் கலவரத்தை அப்பட்டமாக காட்டும் இரு முகங்களாக இருந்தவர்கள் அசோக் பர்மர், குத்புதீன் அன்சாரி. ஒருபுறம் கைகூப்பி கண்கலங்கிய நிலையில் காணப்படும் குத்புதீன் அன்சாரி. மற்றொரு புறம் தலையில் காவி நிற ரிப்பனை அணிந்து, கையில் வாள் ஏந்தியபடி ஆக்ரோஷமாகக் காட்சியளிக்கும் அசோக் பர்மர். இந்த புகைப்படம்தான் குஜராத் கலவரம் பற்றி வெளியான பெரும்பாலான பத்திரிகைகளில் பயன்படுத்தப்பட்டது. இந்தக் கலவரத்துக்கு பிறகு இவர்கள் வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது, கலவரத்தின்போது எதிரெதிர் துருவங்களாக இருந்த இருவரும் எப்படி நண்பர்களாக மாறினார்கள் என்பதை பற்றிய தொகுப்பு...
குஜராத் கலவரம்
2002 பிப்ரவரி 27ஆம் தேதி குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலை ஒரு கும்பல் கொளுத்திவிட்டது. இதில் 59 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம்தான் 1,000 பேர் உயிரை குடித்த குஜராத் இந்து - முஸ்லிம் கலவரம். இச்சம்பவத்தால் குஜராத் மக்கள் மனதில் ஏற்பட்ட ஆறா காயத்துக்கு மருந்தாக அமைந்திருக்கிறது அசோக் பர்மர் - குத்புதீன் அன்சாரி நட்பு.
அசோக் பர்மர் வாழ்க்கை
10ஆவது படிக்கும்போதே பெற்றோரை இழந்த அசோக், சாலையோரத்தில் செருப்பு தைக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். செருப்பு தைக்கும் இடத்துக்கு அருகேயுள்ள பள்ளியில்தான் அவருக்கு இரவு தூக்கம். மதக் கலவரத்தில் ஈடுபட்ட அசோக்கின் வாழ்க்கை மிக மோசமான நிலையில்தான் இருந்துள்ளது. மதம் தனக்கு எதுவும் செய்யவில்லை, உழைப்புதான் உயர்வு தரும் என்பதை அவர் உணர பல ஆண்டுகள் ஆனது.
கலீம் சித்திக் என்ற கேரளாவைச் சேர்ந்த இடதுசாரி ஒருவரை சந்தித்த பின்புதான் அசோக்கின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காக பரப்புரை மேற்கொள்ள அசோக் பர்மரை அழைத்துச் சென்றார் கலீம் சித்திக். சிபிஎம் தலைவர் பி. ஜெயராஜன், அசோக் பர்மருக்கு பொருளாதார உதவி செய்ததோடு, ஒரு வேலைக்கும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் மொழி தெரியாத ஊரில் வேலை பார்ப்பது சிரமம் என அசோக் அந்த வேலையை நிராகரித்துவிட்டார்.