அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள, வழிபாட்டு தலத்தில் நீடித்த 70 ஆண்டுகால சச்சரவு கடந்தாண்டு (2019) நவம்பர் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தால் முடித்துவைக்கப்பட்டது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அந்த அரசியல் சாசன அமர்வு ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்தது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான, ஸ்ரீ ராம ஜென்ம பூமி இயக்கத்தை முன்னெடுத்ததில் பல தலைவர்கள் முக்கிய பங்காற்றினார்கள். அந்தத் தலைவர்களின் பங்களிப்பை காணலாம்.
கோபால் சிங் விஷாரத்
அயோத்தியில் நிறுவப்பட்ட ராமர் சிலைகளை வணங்குவதற்கான உரிமை கோரி, 1950ஆம் ஆண்டு கோபால் சிங் விஷாரத் என்பவரால் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. கோபால் சிங், ஸ்ரீ ராம பக்தர் ஆவார். இவர் அந்த இடத்தில் பிரார்த்தனை செய்ய அனுமதி வேண்டினார். இந்நிலையில் கோபால் சிங், 1986ஆம் ஆண்டு காலமானார். அவருக்கு பின்னர் அவரது மகன் சட்டப்போராட்டத்தை தொடர்ந்தார்.
இதற்கிடையில் 1959ஆம் ஆண்டு நிர்மோஹி அகாரா சார்பில் மூன்றாவது நபராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில், “கடவுள் ராமர் பிறந்ததாக நம்பப்படும் இடத்தின் பாதுகாவலர்கள் நாங்கள்” எனக் கூறப்பட்டிருந்தது. இதனை தலைமையேற்று நடத்தியதில் மஹந்த் பாஸ்கர் தாஸ் முக்கிய பங்காற்றினார்.
அசோக் சிங்கால்
அதன்பின்னர், விஸ்வ இந்து பரிஷத் (வி.ஹெச்.பி) அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்காக நாடு தழுவிய இயக்கத்தைத் தொடங்கியது. அந்த நோக்கத்தில், 1984 ஆம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவோம் என்ற பரப்புரையை முன்னெடுத்தது.
இந்தப் பரப்புரையின் பின்னணியில் இருந்தவர்களில் வி.ஹெச்.பி.யின் தலைவராக இருந்த அசோக் சிங்கால் முக்கிய பங்காற்றினார். ராமர் கோயில் இயக்கத்தின் கட்டடக் கலைஞர்களில் ஒருவராகவும் இவர் விளங்கியதாக கருதப்படுகிறார்.
மஹந்த் அவைத்யநாத்
இவர், ராம ஜென்ம பூமி இயக்கத்தின் தலைவராக இருந்தார். பின்னாள்களில், ராமரின் பிறப்பிடத்தை விடுவிப்பதற்காக ஸ்ரீ ராம ஜென்ம பூமி முக்தி யாக்னா சமிதி ஒன்றையும் அவர் நிறுவினார்.
வினய் கட்டியார்
பஜ்ரங் தளத்தின் நிறுவனரும், பாஜக மூத்தத் தலைவருமான வினய் கட்டியார், ஸ்ரீ ராம ஜென்ம பூமி இயக்கத்தை தீவிரமாக ஆதரித்தார். இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தீவிர உறுப்பினரும் ஆவார்.