தமிழ்நாடு

tamil nadu

உ.பி. டான் விகாஸ் துபே வீட்டிலிருந்து வெடிப்பொருட்கள், துப்பாக்கிகள் பறிமுதல்!

By

Published : Jul 6, 2020, 10:12 AM IST

கான்பூர் : முக்கியக் கொலை குற்றவாளியாக தேடப்பட்டு வரும் விகாஸ் துபே வீட்டில் 25 கையெறி குண்டுகள், இரண்டு கிலோ வெடிப் பொருட்கள், ஆறு துப்பாக்கிகள் ஆகியவற்றை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

vikas
vikas

உத்தரப் பிரேதச மாநிலம் கான்பூர் மாவட்டம், பிக்ரு கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் துபே என்ற ரவுடியை பிடிக்க செளபேபூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் கடந்த இரண்டாம் தேதி நள்ளிரவில் தங்களது தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது, எதிர்பாராத விதமாக விகாஸ் துபேவின் கூட்டாளிகள் காவல் துறையினரை நோக்கிச் சுட்டதில் எட்டு பேர் மரணமடைந்தனர். மேலும் ஆறு காவல் துறையினர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ரவுடி கும்பல் நடத்திய தாக்குதலில் எட்டு காவலர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை முன் வைத்தனர். இதனைத் தொடர்ந்து ரவுடி கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் செளபேபூர் காவல் நிலைய அலுவலர் வினய் திவாரிக்கு தொடர்பிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அடிப்படையில், வினய் திவாரி பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், குற்றவாளி குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அம்மாநிலக் காவல் துறை தெரிவித்துள்ளது. விகாஸ் துபே மீது வழிப்பறி, கொலை, நில அபகரிப்பு என 60 வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன. லக்னோவில் உள்ள துபேவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட பின்பு, அவரது வீட்டை மாவட்ட நிர்வாகத்தினர் இடித்து தரைமட்டமாக்கினர். மேலும், அவரது சொகுசு கார்களையும் சேதப்படுத்தினர்.

விகாஸ் துபேவை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட 25 தனிப்படைகள், கடந்த 48 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தேடியுள்ளனர். இந்தியா - நேபாள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் ’வாண்டட்’ சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், துபே வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், 25 கையெறி குண்டுகள், இரண்டு கிலோ மதிப்புள்ள வெடிப்பொருட்கள், ஆறு துப்பாக்கிகள் ஆகியவற்றை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தவிர, துபேவின் நெருங்கிய கூட்டாளி அக்னி கோத்ரியை தனிப்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருந்து வரும் துபேவைப் பிடிக்க ஒரு லட்சம் ரூபாய் சன்மானத்தை காவல்துறை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'சீன விவகாரத்தில் பிரதமர் மோடி பொய் சொல்கிறார்' - ஒவைசி

ABOUT THE AUTHOR

...view details