கேள்வி: தோட்டாவுக்கு எதிராக பர்ஸ் என்ற சிந்தனை, தங்களுக்கு எவ்வாறு உதித்தது?
பதில்:நான் லடாக்கில் பிறந்து வளர்ந்தேன். சிறு வயதில் இருந்தே சீனாவின் வல்லாதிக்க முரட்டுத்தனம் மற்றும் ஊடுருவல் என அனைத்தையும் பார்த்து வந்திருக்கிறேன். லடாக் நிலப்பரப்பு எனக்கு நன்றாகத் தெரியும். அவ்வப்போது சீனா நிகழ்த்தும் அட்டூழியத்தை என்ன பெயரில் வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். இதனால் லடாக் மக்களுக்குத் தான் துயரம். எல்லை தாண்டிய சீன ஊடுருவலால் லடாக் மக்கள், குறிப்பாக ஆடு மேய்ப்பவர்கள், மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். தினமும் மேய்ச்சலுக்கு மந்தையை ஓட்டிச் செல்லவேண்டும். ஆனால் சீன ஆக்கிரமிப்புகளால், அவர்களின் மேய்ச்சல் நிலத்தின் பரப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. மேய்ச்சலுக்கு நிலமின்றி சிரமப்படுகிறார்கள். இது தொடர்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பு நீண்ட காலமாகவே என்னுள் உள்ளது.
சீனாவின் தற்போதைய ஊடுருவலும் ஆக்கிரமிப்பும் எதேச்சையான செயல் அல்ல, மாறாக இம்முறை தெளிவான செயல் திட்டத்துடன் ஒரு தீய உள்நோக்கத்துடன் நிகழ்த்தப்படுவது என்பதை நான் புரிந்துகொண்டேன். அவர்களின் நோக்கம், எல்லையில் சில்மிஷம் என்பதையும் தாண்டிய ஒன்று என யூகிக்க முடிந்தது. காரணம், கோவிட்-19 என்னும் பெருந்தொற்று உலகையே உலுக்கி வரும் இந்த வேளையில் எந்த ஒரு நாடும் செய்யத் துணியாத காரியத்தை சீனா செய்கிறது.
இந்தியாவை மட்டுமல்ல, வியட்நாம், தைவான் மற்றும் அமெரிக்க கடற்படை, என பலரையும் தென் சீனக்கடலில், சீனா ஆத்திரமூட்டி வருகிறது என்பதையும் புரிந்துகொண்டேன். சீனாவின் இந்த வரம்புமீறிய செயல்பாடுகளின் பின்னணியில் வேறு ஏதோ காரணம் இருக்கிறது. ஏனென்றால், இவை அனைத்தும் ஒருமாத கால அளவில் நடந்துள்ளன. இவற்றைக் கூர்ந்து நோக்கும்போது, அவர்கள் தங்கள் உள்நாட்டுப் பிரச்னைகளுக்கு தீர்வு காண இத்தகைய நடவடிக்கைகளை கையாளுகிறார்கள் என்பது தெளிவாகும். கரோனா பெருந்தொற்றை சரிவர கையாளும் திறமை இல்லாமல் தோல்வியடைந்து, பொருளாதாரத்தையே சீரழித்துவிட்டது அரசு என்ற கோபம் சீன மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. எனவே, அரசின் தவறுகளை மறைத்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப, எல்லையில் வாலாட்டுகிறது. சீனாவின் நோக்கம் குறித்து நாமும் ஒரு முடிவுக்கு வரலாம்.
சரிவில் இருந்து தனது பொருளாதாரத்தை மீட்கவே சீனா இதுபோன்ற முயற்சிகளில் இறங்கியுள்ளது என்றபோது, நாமும் தகுந்த பதிலடி தரவேண்டும். நாம் தரும் பதிலடி, சீன பொருளாதாரத்தை நிலகுலைய வைப்பதாக இருக்க வேண்டும். துப்பாக்கியும் தோட்டாவும் நமது எதிர்வினையாக இருக்கவேண்டும் என்பதே சீனாவின் எதிர்பார்ப்பு. ஆனால், அவர்கள் விரித்த வலையில் நாம் வீழ்ந்துவிடக்கூடாது. சீனாவின் பொருளாதாரம் பின்னடைந்து வருவது அவர்களுக்குப் பெரும் கவலை தரும் நிலையில், நாம் ஏன் பொருளாதார தளத்தில் தாக்குதல் தொடுக்கக்கூடாது?
ஆகவேதான், இந்த பொருளாதார தாக்குதலை மக்கள் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ஆயுதம் ஏந்த வேண்டியதில்லை, நமது கரங்களில் உள்ள பர்ஸ் போதும். இந்திய மக்களே இதனை செயல்படுத்த களமிறங்க வேண்டும். நீங்கள் உங்கள் சொந்த கிராமத்தில் உள்ள வீட்டிலோ, நகரத்திலோ எந்த மூலையில் இருந்தாலும் சீன செயலிகளை உங்கள் அலைபேசியில் இருந்து நீக்கிவிடலாம். சொல்லப்போனால், இது மிகவும் எளிதானது, சாதாரனமானது என்று தோன்றலாம். ஆனால், மக்களின் பேராதரவுடன் இதுவே மிகப்பெரும் அளவில், லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் நிகழ்ந்தால், சீனாவுக்குப் பலத்த அடியாகும். அவர்கள் எதற்காக அச்சப்படுகிறார்களோ அதனை நேரில் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் வரும். பின்னடைவச் சந்தித்து சரிந்து வரும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக, சீன மக்களுக்கு அரசின் மீதான அதிருப்தியும் அதிகரிக்கும்.
கேள்வி:உங்கள் நோக்கமும் குறிக்கோளும் புரிகிறது. ஆனாலும் ஒரு கேள்வி. சீனப்பொருள்களையும், செல்போன் செயலிகளையும் புறக்கணிப்பது நடைமுறையில் சாத்தியமா? அவ்வளவு எளிதானதா? இந்தியாவில் மட்டுமன்றி, உலகம் முழுவதும் பல நாடுகளிலும் சீனப் பொருள்கள் மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள இன்றைய சூழலில், சீனப் புறக்கணிப்பு என்பது மிகவும் கடினமான ஒன்றுதான் என்றாலும் முடியாத ஒன்றல்ல. எவ்வாறு செயல்படுத்துவது?
பதில்:உண்மைதான், சீனப் பொருள்கள் புறக்கணிப்பு, செயலிகள் நீக்கம் என்பது சவாலான ஒன்றுதான். இருப்பினும், நிகழ்த்திக் காட்ட முடியாத ஒன்றல்ல. உலகில் பல காரியங்களை செய்து முடிப்பது மிகவும் கடினம்தான் என்பதை நானே கூட அடிக்கடி கூறி வந்திருக்கிறேன். ஆனால், சமண சமயத்தைச் சார்ந்த மக்கள் சமூகம் நமக்கு வழிகாட்டுகிறார்கள். அவர்களைப் பார்த்து நாமும் கற்றுக்கொள்ளலாம். வெங்காயம், பூண்டு, கேரட் போன்றவற்றை சமண சமயத்தினர் சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். அவர்களது உணவில் இவை இல்லை. இருப்பினும், அவர்கள் வாழ்க்கையை செவ்வனே நடத்திச் செல்கிறார்கள். எனவே, எதுவும் சிரமமானது அல்ல, முடியாத ஒன்றுமல்ல. நாம் தீர்க்கமாக முடிவெடுத்து செயல்படுத்தினால், சூழலும் அதற்கேற்ப மாற்றம் பெறும்.
சமண சமய சமூகத்தினர் எங்கு சென்றாலும், அவர்களுக்கான உணவு இல்லாமல் இல்லை. எங்கும் கிடைக்கிறது. அவர்கள் விரும்பினால், வேகான் வேண்டுவோருக்கு வேகான் உணவும், சைவ உணவு வேண்டுவோருக்கு சைவ உணவும் பெற முடியும். சீன புறக்கணிப்பில் உள்ள சிரமங்களை, இந்தியா-சீனா எல்லையில் நமது ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுடன் ஒப்பிட்டால் எது உண்மையில் கடினம் என்பது நமக்கு புரியும். எல்லையில், உறைபனியின் கடும் குளிரில் தேச பாதுகாப்புக்காக பணிபுரியும் வீரர்கள் படும் கஷ்டத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், சீன செல்போன் செயலிகளை நீக்குவது அவ்வளவு சிரமம் இல்லை என்பது தெளிவாகும்.
மிகுந்த சிரமத்துக்கு இடையே எல்லையில் உள்ள வீரர்களின் நிலைமையுடன் ஒப்பிடும்போது, சீன செயலிகளை நீக்குவது ஒரு பொருட்டே இல்லை. செல் போனில் இருந்து ஒரு செயலியைக் கூட உங்களால் நீக்க இயலாது என்றால், என்னத்த சொல்ல?
கேள்வி:‘விடு பார்த்துக்கொள்ளலாம்’ என்ற எதையும் ஒத்திப்போடும் சாதாரண இந்தியரின் மன நிலை உங்களை வாட்டுகிறதா?
பதில்: ஆமாம். எதையுமே சர்வ சாதாரணமாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையை நகர்த்தும் ’சல்தா ஹை’ என்ற விநோதமான அணுகுமுறை எனக்கு பெரும் கோபத்தை மூட்டுகிறது. ஒரு தேசம் என்ற அளவில் நாம் வீழ்ச்சி அடைவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டென்றால், அது இந்த ’சல்தா ஹை’ என்னும் அணுகுமுறைதான். இங்குதான், நாம் சீனர்களிடம் இருந்து சிலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். எடுத்த காரியம் எதையுமே, சீனர்கள் திறம்பட செய்துமுடிப்பதில் வல்லவர்கள். இதை நான் பல நேரங்களில் கவனித்திருக்கிறேன். சிறு விஷயம் என்றாலும் கூட, மிகவும் உன்னிப்பாக செயல்படும் அவர்களது திறமையும் விடாமுயற்சியும் வெற்றிக்கு வழிவகுக்கிறது.
இந்த மன நிலை, தற்போது ஊரடங்கு தளர்வுக்குப் பின்னான மக்களின் நடைமுறையில் வெளிப்படுகிறது. கடந்த சில மாதங்களில், கரோனா தடுப்பில் நாம் மேற்கொண்ட முயற்சிகளை, நமது செயல்பாட்டை உலகமே வியந்து பாராட்டியது. ஆனால், இந்த போக்கு அந்த புகழுக்கும் பெருமைக்கும் குந்தகம் விளைவித்துவிடும் என்ற கவலை உள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் நாம் மேற்கொள்ளாவிட்டால், கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா தோற்றுப்போகும் நிலைக்குத் தள்ளப்படலாம்.
இந்தியர்கள் விரைவாக வைரஸ் தொற்றுக்கு இலக்கானால், நாம் எவ்வாறு சீனாவை எதிர்கொள்வது? இதற்கு மாறாக, சீன குடிமக்களிடம் எப்போதும் இடையறாத பொறுப்புணர்வை நாம் காண முடியும். சீனர்களின் இந்த பொறுப்புணர்வே, அந்த தேசம் கரோனா பரவலைக் கட்டுக்குள் வைக்க முக்கிய காரணமாக அமைந்தது. இந்த குணங்களை சீனரிடம் இருந்து கற்றுக்கொள்வதுடன் நம்மை கட்டுப்பாடுடன் ஒழுங்குபடுத்திக் கொண்டால், கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் நாம் நம்பிகையுடன் இருக்கலாம்.