17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், வாக்கு எண்ணும் பணியின்போது வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்படும் கோளாறுகள் குறித்து தேர்தல் அலுவலர்கள் புகார் அளிப்பதற்கு ஏதுவாக, டெல்லி நிர்வாசன் சதனில் வாக்குப்பதிவு இயந்திரம் கட்டுப்பாட்டு அறையை தேர்தல் ஆணையம் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.
24 மணிநேரம் செயல்படும் இந்தக் கட்டுப்பாட்டு அறையை 011-23052123 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம்.
முன்னதாக, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக வந்த புகாரை நிராகரித்த தேர்தல் ஆணையம், "அவை முற்றிலும் பொய்" என்று கூறியுள்ளது.
மேலும், "வேட்பாளர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகள் முற்றிலும் பாதுகாப்பானது" எனத் தெரிவித்துள்ளது.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு தலைமையிலான 21 எதிர்க்கட்சித் தலைவர்கள், வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாக வாக்கு எண்ணிக்கையை மேற்கொள்வதற்கு பதிலாக ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களைக் கொண்டு வாக்கு எண்ணவேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.