நாடு முழுவதும் இன்று அரிய வானியல் நிகழ்வான சூரிய கிரகண நிகழ்வு நடந்தது. நெருப்பு வளைய சூரிய கிரகணத்தைக் காண நாட்டு மக்கள் ஆர்வம் கொண்டு கண்டு ரசித்தனர். இன்று காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை நிகழ்ந்த சூரிய கிரகணத்தைப் பலரும் நேரடியாகவும், அதற்குரிய சோலார் தொலை நோக்கி மூலமும் அறிவியலாளர்களும் பொதுமக்களும் கண்டு வியந்தனர்.
இந்த நிலையில், பல இந்தியர்களைப் போல தானும் சூரிய கிரகணத்தைக் காண ஆர்வம் கொண்டிருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், 'துரதிர்ஷ்டவசமாக, டெல்லியில் மேக மூட்டம் காரணமாக என்னால் சூரியனைப் பார்க்க முடியவில்லை. இருப்பினும் கோழிக்கோடு உள்ளிட்டப் பகுதிகளில், தென்பட்ட சூரிய கிரகணத்தை நேரலை நிகழ்வில் கண்டேன். இது குறித்து அறிவியலாளர்களுடன் கலந்துரையாடியதில் சூரிய கிரகணம் பற்றி கூடுதலாக தெரிந்துகொள்ள முடிந்தது' எனப் பதிவிட்டுள்ளார்.