பீமா கோரோகன் வழக்கை மும்பையிலுள்ள தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என தேசிய புலனாய்வு முகமை புனே நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்திருந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வாலா பவார், தேசிய புலனாய்வு முகமை வைத்திருக்கின்ற இந்த கோரிக்கை குறித்து எந்த வித முன்னறிவிப்பும் வழங்கவில்லை. எனவே, அரசு தரப்பு கருத்தை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கோரினார்.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தங்களுக்கும் கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் கருத்தை தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இருதரப்பு வாதத்தையும் கேட்ட கூடுதல் அமர்வு நீதிபதி எஸ்.ஆர். நவந்தார் வழக்கு விசாரணையை பிப்ரவரி 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
பீமா கோரோகன் வழக்கானது கடந்த மாதம் புனே காவல் துறையிடமிருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த நடவடிக்கையை காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது. தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவார் கடந்த காலத்தில், இவ்வழக்கில் செய்த தவறு அம்பலப்பட்டுவிடும் என்ற பயத்தால் தற்போது தேசிய குற்றப்புலனாய்வு முகமைக்கு இவ்வழக்கை பாஜக அரசு மாற்றியிருக்கிறது என விமர்சித்திருந்தார்.
மேலும், சுதிர் தாவாலே, ரோனா வில்சன், சுரேந்திர காட்லிங், மகேஷ் ராவுட், ஷோமா சென், வெர்னோன் கோன்சல்வேஸ், சுதா பரத்வாஜ், வரவர ராவ்,கௌதம் நவ்லகா ஆகியோருக்கு எதிரான இவ்வழக்கை விசாரித்த புனே காவல்துறையின் விசாரணை சரியான முறையில் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என முன்னதாக சரத்பவார் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேலைவாய்ப்பை உருவாக்குவதில் இந்திய அரசு படுதோல்வி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு