மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி மற்றும் கொல்கத்தா வழியாகத் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சிலிகுரி பங்கூர் அவென்யூ அருகே வந்து கொண்டிருந்த ஒரு காரை வருவாய் புலனாய்வு இயக்குனரக அலுவலர்கள் தடுத்து நிறுத்தி அதில் சோதனை செய்தனர். அப்போது, வங்கதேசத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 6.882 கிலோ எடையுள்ள 42 தங்க பிஸ்கட் மற்றும் ரூ 3.62 கோடி பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
காரை ஓட்டிவந்த நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ 88.17 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இதற்கு முன்பு கடத்தப்பட்ட தங்கத்தை விற்பனை செய்தவர்களிடமிருந்து இந்த பணம் பெறப்பட்டது தெரியவந்தது. காரை ஒட்டி வந்த நபர், அவரது தந்தை மற்றும் ஒரு ஊழியர் கைது செய்யப்பட்டனர்
அதேபோல், டார்ஜிலிங் மோர் அருகே ஒரு காரை தடுத்து சோதனை செய்ததில் 4.980 கிலோ எடையுள்ள 30 தங்க பிஸ்கட் மற்றும் ரூ .2.60 கோடி மதிப்புள்ள பணம் மியான்மரில் இருந்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காரை ஒட்டிவந்த மணிப்பூரைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
தங்கத்தைப் பறிமுதல் செய்த அலுவலர்கள், அவற்றைக் கொண்டு வந்த ஜந்து பேரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த 2019 முதல் 2020வரை, வருவாய் புலனாய்வு இயக்குனரகம் நடத்திய சோதனையில் மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமில் ரூ .115 கோடி மதிப்புள்ள சுமார் 300 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.