சிவ சேனாவின் வருடாந்திர தசரா பேரணியில் கலந்துகொண்டு பேசிய மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, நடிகை கங்கனா ரனாவத் குறித்து மறைவாக சாடினார். அப்போது " பிழைப்பிற்காக மும்பைக்கு வந்த சிலர், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைத்ததன் மூலம் இந்நகரத்தில் தங்களுக்கு கிடைத்த வாய்பை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். எங்கள் வீட்டில் நாங்கள் துளசி வளர்க்கிறோம் கஞ்சா அல்ல என்பது அவர்களுக்குத் தெரியாது. கஞ்சா வயல்கள் உங்கள் மாநிலத்தில் உள்ளன” என்று கங்கனா ரனாவத்தை மறைமுகமாக சாடி பேசினார்.
இதற்கு, கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகை கங்கனா ரனாவத் உத்தவ் தாக்கரேவை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். தாக்கரே பேசியற்கு பதிலளித்த கங்கனா, இமாச்சலப் பிரதேசத்தை அவதூறாக பேசியதன் மூலம் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தன்னை சிறுமைப்படுத்திகொண்டார் என்று கூறினார்.
இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர்,
"நீங்கள் ஒரு தலைவராக இருந்துகொண்டு பிற மாநிலத்தைப் பற்றி தவறான கருத்துகளைக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் முதலமைச்சராக இருக்க வெட்கப்பட வேண்டும், ஒரு பொது ஊழியராக இருந்துகொண்டு சிறுமையாக சண்டையில் ஈடுபடுகிறீர்கள், உங்கள் அதிகார சக்தியைப் பயன்படுத்தி யார் உங்களுடன் உடன்படவில்லையோ, அவர்களை அவமதிக்கவும், சொத்துக்களை சேதப்படுத்தவும், அவமானப்படுத்தவும் செய்கிறீர்கள். இதுபோன்ற கீழ்த்தரமான அரசியல் செய்யும் நீங்கள் முதலமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏன் மகாராஷ்டிரா தனக்கு சொந்தமானது போல் அவர் நடந்து கொள்கிறார்? " என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், "இமயமலையின் அழகு ஒவ்வொரு இந்தியருக்கும் எப்படி சொந்தமானதோ, மும்பை வழங்கும் வாய்ப்புகள் நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. உத்தவ் தாக்கரே எங்கள் ஜனநாயக உரிமைகளை பறிக்கவும் எங்களை பிளவுபடுத்தவும் உங்களுக்கு உரிமை இல்லை, உங்கள் இழிவான பேச்சுகள் உங்கள் திறமையின்மையை காட்டுகிறது" எனவும் குறிப்பிட்டுள்ளார்.