தெலங்கானா போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு, மாநில உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் மக்களை வஞ்சிக்கக் கூடாது என கேட்டுக் கொண்டார்.
மேலும் அரசாங்கத்துக்கும் தொழிற்சங்கத்துக்கும் இடையே தேவையான பேச்சுவார்த்தை குறித்தும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இது தொடர்பாக போராட்டக்குழு செய்தித்தொடர்பாளர் அஸ்வத்தமா ரெட்டி கூறும்போது, “26 கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்துள்ளோம். அந்த கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கும் வரை எங்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும்.
எனினும் அரசோ அல்லது தொழிற்சங்கமோ போராட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கும்பட்சத்தில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வோம்” என்றார். வடமாநிலங்களில் நவராத்திரி துர்கா பூஜை போன்று, தெலங்கானாவில் 'பதுக்கம்மா' விழா பிரசித்திப் பெற்றது. இவ்விழா காலத்தில் போக்குவரத்து ஊழியர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.