சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் தோன்றிய கோவிட்-19 என்னும் கரோனா வைரஸ், உலக நாடுகள் மத்தியில் வேகமாகப் பரவிவருகிறது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கோவிட்-19 வைரஸ் தொற்றின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துவருகின்றன.
இதனால், அந்நாடுகளில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பாதிப்புக்கு ஆளாவதும், ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதும் தொடர் கதையாக இருந்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தத் தொற்றுக்கு தற்போதுவரை மருந்து கண்டறியப்படவில்லை என்றாலும், மாற்று மருந்து மூலம் பெரும்பாலானோர் குணமடைந்துள்ளனர்.
இதற்குத் தீர்வுதான் என்ன? என்று பாமர மக்கள் மத்தியிலிருந்து உலக நாடுகளின் தலைவர்கள் வரை கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், கோவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள...
அனைவரும் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்,
தும்மும்போது அருகில் உள்ளவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு முகத்தை மூட வேண்டும்,
வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிய வேண்டும்,
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்
என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதை நாம் பின்பற்ற வேண்டும். மேலும், தொற்றில் இருந்து நம்மை பாதுக்காத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பவை
மனிதர்களின் குடலில் உள்ள தோய்த் தொற்று, பாக்டீரியா ஆகியவை இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன. ஆனால், இது வயதுக்கு ஏற்ப குறைவதாகவும் ஒரு சிலருக்கு மட்டும் வயதை பொருட்படுத்தாமல் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும் மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மார்பகத்தின் பின் பகுதியில் இயங்கும் தைமஸ் சுரப்பி உதவுகிறது. குழந்தை பருவத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் தைமஸ் சுரப்பி, ஆண்டுதோறும் மூன்று விழுக்காடு குறைவதன் மூலம் வயது முதிர்வின்போது செயலிழந்துவிடும். இதனால், தொற்று நோய்களைச் சமாளிப்பது கடினம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Don't let your guard down பொதுவாக, மனிதர்களின் உடல் அமைப்புக்குள் உள்ள நியூட்ரோபில்ஸ் என்னும் ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள், நோய் தொற்றை எதிர்த்துப் போராட சைட்டோகைன் உள்ளிட்ட நொதிகளை வெளியிடுகிறது.
மேலும், இது இதயத் துடிப்பை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. குறிப்பாக, உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இம்யூனோகுளோபின் செல்ல நியூட்ரோபில்ஸ் பெரிதும் உதவுகிறது. நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
உணவுமுறைகள்
மனிதர்கள் வாழ முதன்மையானது உணவு. நாம் உண்ணும் உணவுகளே உடல் நலத்தைத் தீர்மானிக்கிறது. அந்த வகையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நமது குடலில் உள்ள புரோபயாடிக் பாக்டீரியாக்களில் கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம் குடல் ஆரோக்கியம் அடைந்து ஆயுள்காலத்தை அதிகரிக்க முடியும்.
தயிர், மோர் போன்ற புளித்த நீராதாரம் பருகுவதால் குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரிக்கும். பழங்கள், காய்கறிகள், கீரைகள் சாப்பிடுவதால் நார்ச்சத்து அதிகரித்து பாக்டீரியாக்களின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
மேலும் கறிவேப்பிலை, பப்பாளி, சிட்ரஸ் பழங்கள், இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
விரதத்தால் நன்மைகள்
நமது உடலில் கலோரி அளவைக் குறைப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். தொடர்ச்சியாக விரதம் இருப்பவர்களின் உடல்கள் மன ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை உள்ளன.
மனிதர்களால் நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் சாப்பிடாமல் இருக்க முடியும். மீதமுள்ள 8 மணி நேரத்துக்குள் மட்டுமே உணவு எடுத்துக் கொண்டால், கலோரி அளவைக் குறைப்பதற்கு சிறந்த வழியாகும்.
எடைக் கட்டுப்பாடு
அதிக எடை அல்லது குறைவான எடை கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெற இடையூறு ஏற்படும். உடல் பருமன் இருந்தால், பி உயிரணுக்களின் திறன் வயதுக்கு ஏற்ப குறைந்து போதுமான ஆன்ட்டிபாடிகளின் உற்பத்தி அதிகரிக்க தடை ஏற்படுகிறது. நீரிழிவு நோயிலிருந்து நமது உடலைப் பாதுகாக்க உகந்த எடையை பராமரிப்பது முக்கியம்.
"உணவே மருந்து" என்ற பழமொழிக்கேற்ப உணவுப் பழக்கத்தை மேற்கொண்டாலே நீண்டநாள் நலமாக வாழலாம். சாப்பிடுவதற்காக வாழாமல், வாழ்வதற்காகச் சாப்பிட்டாலே உடல் ஆரோக்கியம் அடைந்து மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படாது.