பி.எம்.கேர்ஸ் அறக்கட்டளை நிதியை தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பி.எம்.கேர்ஸ் நிதியை தேசியப் பேரிடர் நிதிக்கு மாற்ற உத்தரவிட மறுத்து நேற்று(ஆக.18) தீர்ப்பளித்தது.
இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வெளியிட்டுள்ள ப.சிதம்பரம், " பி.எம் கேர்ஸ் அறக்கட்டளை நிதியை தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு மாற்ற முடியாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு இறுதியானது தான். இருப்பினும், பி.எம் கேர்ஸ் மீதான விவாதங்கள் கல்வி வட்டாரங்கள், அறிவார்ந்தவர்கள் மத்தியில், கேள்விகள் தொடர்ந்து எழும் அதைத் தடுக்க வாய்ப்பில்லை.
அந்த அறக்கட்டளை நிதியத்தின் வெளிப்படைத்தன்மை, கணக்குவழக்கு மற்றும் மேலாண்மை நடைமுறைகள் உள்ளிட்ட பிற அம்சங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. கடந்த 2020 மார்ச்சில் முதல் ஐந்து நாட்களில், ரூ.3,076 கோடியை வழங்கிய நன்கொடையாளர்கள் யார் என்று நாடு அறிய வேண்டும்.