வேளாண் மசோதாக்கள் கடந்த 20ஆம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கடும்எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், குறிப்பாக காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அமலியில் ஈடுபட்டனர்.
இதனால் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அவர்களை இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இருந்து விலக்கி இடைநீக்கம் செய்தார். இதனையடுத்து அவர்கள் எட்டு பேரும் நாடாளுமன்ற வளாகத்தின் காந்தி சிலை அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு(செப்.21) முழுவதும் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஆதார் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து இரண்டாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா சார்பில் வீட்டில் செய்யப்பட்ட இட்லிகள் உண்பதற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அப்பகுதியில் வெப்பம் அதிகரிப்பால் நாடாளுமன்ற உறுப்பினர்ககள் அருகில் இரண்டு மின் விசிறிகள் வைக்கப்பட்டிருக்கிறது.