நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சையின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வரவிருக்கும் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் இயக்குநர் அம்ஜத் கான், குரானை அவமதித்ததாகக் கூறி நொய்டாவைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுருவிடமிருந்து ஃபத்வா பெற்றுள்ளார். குல் மக்காய் என்று பெயரிடப்பட்டுள்ள அவர் இயக்கிய இப்படம் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அம்ஜத் கான், “இப்படத்தைத் தொடங்கியதிலிருந்து எனக்குப் பலரும் கொலை மிரட்டல் விடுத்தனர். இப்போது நொய்டாவைச் சேர்ந்த மதகுரு ஒருவர், எனது படத்தின் போஸ்டரை வைத்து புதிய சிக்கலை உருவாக்கியுள்ளார்.
பட போஸ்டரில் மலாலா ஒரு புத்தகத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் அவருக்குப் பின்னால் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்வதுபோல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில், அதொரு ஆங்கிலப் புத்தகம்தான். ஆனால் அப்புத்தகம் குர்ஆன் என்றும் இஸ்லாமிய புனித நூலை நான் இழிவுபடுத்துவதாகவும் கருதி நொய்டாவைச் சேர்ந்த மதகுரு, எனக்கு ஃபத்வா (இஸ்லாமிய மத அடிப்படையிலான தீர்ப்பு) வழங்கியுள்ளார். மேலும் என்னை அவர் காஃபிர் (இறைவனை முழுமையாக எதிர்ப்பவர்) என்றும் அழைத்தார்" என்று கூறினார்.