பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் அரசியல் விடுத்து பிரதமர் மோடியிடம், தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், ரசனை, எண்ணங்கள், குறித்து தான் பேட்டியெடுக்க உள்ளதாகப் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று காலை, பிரதமர் மோடியின் இல்லமான 'லோக் கல்யாண் மார்க்'இல் அவரைச் சந்தித்த அக்சய் குமார் அவருடன் உரையாடினார்.
அப்போது பேசிய மோடி, இந்தியாவின் பிரதமராக உயர்வேன் என்று தான் நினைத்துக்கூட பார்த்ததில்லை என்றும், தன்னுடைய குடும்பப் பின்னணி அதற்கு எப்போதும் உறுதுணையாக இருந்ததில்லை என்றும் மனம் திறந்து பேசினார்.
மேலும், ராமகிருஷ்ண பரமஹம்சாவின் ராமகிருஷ்ணா இயக்கம் தன் வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், தான் சந்நியாசியாக ஆசைப்படுவதாக விருப்பம் தெரிவித்திருந்தார்.
எதிர்க்கட்சியிலும் தனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் என்றும், தனக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் நெருங்கிய நட்புறவு இருப்பாக சிலாகித்துக் கூறினார். அந்த நட்பின் வெளிப்பாடாகவே ஆண்டுதோறும் தனக்கு குர்தா, இனிப்பு ஆகியவற்றை மம்தா பரிசாக அனுப்புவார் என மகிழ்ச்சி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தான் சட்டப்பேரவை உறுப்பினர் ஆகும் வரை தனக்கென்று ஒரு வங்கிக் கணக்கு இருந்ததில்லை எனக் குறிப்பிட்டார்.
தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பகிரப்படும் 'மீம்களின்' கற்பனைத் திறனைத் தான் ரசிப்பதாகத் தெரிவித்த மோடி, "இப்போதெல்லாம் நான் ஜோக் சொல்வதில்லை. ஏனென்றால் அதனைத் தவறாகப் புரிந்துகொண்டு டிஆர்பிக்காக தொலைக்காட்சிகள் பயன்படுத்திக்கொள்ளும்" என வருத்தம் தெரிவித்தார்.
நீங்கள் எப்போதாவது கோபப்படுவதுண்டா? என்ற அக்சய் குமாரின் கேள்விக்கு, "நான் கட்டுப்பாடானவன், ஆனால் எனக்குக் கோபம் வராது. அப்படி வந்தால் அதை நான் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஏனென்றால் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும்" எனத் தெரிவித்தார்.
மேலும், தனக்கு நீந்துவது என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று என்றும், தன்னுடைய துணியைத் தானே துவைப்பதாகவும்பேட்டியில் பகிர்ந்துகொண்டார். மேலும், மாம்பழம் தனக்கு மிகவும் பிடித்த கனி என்று மோடி குறிப்பிடுகையில் அவரது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.