தலைநகர் டெல்லியில் காற்றின் மாசு நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக அப்பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தெருவோரம் இருக்கும் சிறுவர்களும் வியாபாரிகளும் முகமூடி கூட இல்லாமல், காற்று மாசு காரணமாக கடும் சிரமத்தைச் சந்தித்துவருகின்றனர். நாட்டின் தலைநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் கடந்த வியாழக்கிழமை காற்று தர மதிப்பீடு 472 ஆக இருந்தது.
இந்தக் காற்று தர அளவீடு 50-க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே நல்ல நிலையில் இருப்பதாகப் பொருள். 400-500 ஆக இருந்தால் நிலைமை காற்று மாசு கடுமையாக உள்ளது என்று அர்த்தம். 500-க்கு மேல் என்ற மிகக் கடுமையான நிலைக்கு இந்தக் காற்று மாசு விரைவில் செல்ல வாய்ப்புள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்.