உலகளாவிய பெருந்தொற்று நோயான கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக, டெல்லியில் 2,376 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 50 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் 89 பகுதிகள் கோவிட்-19 பெருந்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட சிவப்பு குறியீட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு ஊரடங்கு உத்தரவை இரண்டாம் கட்டமாக நீட்டித்துள்ளது. தனி நபர் இடைவெளியைப் பின்பற்றும் நோக்கில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்து, பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடைவிதித்துள்ளது.
இருப்பினும் நாளுக்குநாள் அதிகரிக்கும் வைரஸின் தாக்கம் காரணமாக தொற்றுநோய் பரவல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனை தடுக்கும் நோக்கில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.