டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு நாளை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஒரு கட்சியிலிருந்து தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காமல் வேறு கட்சிக்கு மாறிய பிரபலங்கள் உள்ளனர். இவர்களில் சிலருக்கு நல்வாய்ப்பாக போட்டியிட வாய்ப்பு கிட்டியது. எனினும் பலர் எதிர்ப்பாளராகவே அடங்கி போனார்கள்.
அல்கா லம்பா
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர். கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆம் ஆத்மியிலிருந்து பிரிந்து காங்கிரஸில் இணைந்தார். தற்போது காங்கிரஸ் சார்பில் சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிடுகிறார். அல்கா லம்பா, ஆம் ஆத்மி கட்சியோடு தொடக்கதிலிந்தே பயணித்தவர் ஆவார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நன்கு பரீட்சயமானவர். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் உடன் பயணித்தவர். இவர் கடந்தாண்டு காங்கிரஸில் இணைந்தார்.
பிரஹலாத் சிங் சாவ்னி
நான்கு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ. இவர் கடந்தாண்டு அக்டோபரில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். இவர் சாந்தினி சவுக் தொகுதியில் அல்கா லாம்பாவுக்கு எதிராக போட்டியிடுகிறார். பாஜகவின் வேட்பாளர் சுமன் குமார் குப்தாவும் களம் காண்கிறார். இவர் முன்னாள் கவுன்சிலர். இந்த மூவருக்கும் இடையே சாந்தினி சவுக் தொகுதியில் கடுமையான போட்டி நிலவுகிறது.