டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு.) வளாகத்தில் பருவ நிலைத் (செமஸ்டர்) தேர்வுப் பதிவை ஒத்தி வைக்கக் கோரியும், தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அப்பல்கலைக்கழக மாணவர்கள் அமைதிப் பேரணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென முகமூடி கும்பல் ஒன்று இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையோடு வந்து அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கியது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதைக் கண்டித்து திரைப்பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தீபிகா படுகோனே தற்போது டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். ஏற்கெனவே ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, இயக்குநர் அனுராக் காஷ்யப், டாப்சி பானு உள்ளிட்டோர் மும்பை இந்திய கேட்டில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.