உத்தரப் பிரதேசம் மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் வசித்துவருகிறார் போலா சிங். இவரது சகோதரர் ராஜ் நாராயண். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னதாக, குடும்பச் சொத்தை முழுமையாக அனுபவிக்க ஆசைப்பட்டு அண்ணன் போலா சிங் உயிரிழந்துவிட்டதாக ராஜ் நாராயண் கதைக் கட்டியுள்ளார்.
உயிருடன் இருப்பதை நிரூபிக்க முயற்சி
நாராயணின் இந்தச் சதிச் செயலுக்கு வருவாய்த் துறை அலுவலர்களும் இணங்க, போலா சிங் உயிரிழந்துவிட்டதாக அரசு ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்டது.
இதையறிந்த போலா சிங் தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க எவ்வளவோ முயன்றார். ஆனாலும்கூட அவரது முயற்சி தோல்வியில்தான் முடிந்தது. இதன்பின்னர் சட்டத்தின் உதவியை நாடியிருக்கிறார் போலா சிங்.
உயிருடன் இருக்கிறேன்!
இதன் கடைசி முயற்சியாக கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி மாவட்ட நீதித் துறை நடுவர் அலுவலகத்தின் முன்னால், 'ஐயா, நான் உயிருடன் இருக்கிறேன்' என ஒரு பதாகை ஏந்தி அமர்ந்தார் போலா சிங்.
இந்தப் போராட்டத்திற்குப் பின்னர் அவரது பிரச்சினை ஊடகத்தின் வாயிலாக உயர் அலுவலர்களுக்குத் தெரியவந்தது. இதன்பின்னர் மாநில முதலமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்தனர்.
டி.என்.ஏ. சோதனை
இரு சகோதரர்களுக்கும் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. அப்போது ராஜ் நாராயண் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அவர் மீது சந்தேகம் வலுக்கவே, ராஜ் நாராயணின் டி.என்.ஏ. சோதிக்கப்பட்டது.
நீதி வென்றது!
போலாவின் வழக்கறிஞர் கூறுகையில், "போலா சிங் உயிருடன் இருப்பது 1999 வரை அரசுப் பதிவுகளில் இருந்தது. அதன்பின் அவர் காணாமல்போனதால் அந்த நிலம் அவரது சகோதரரின் பெயருக்கு மாற்றப்பட்டது. இப்போது இறுதியாக அவருக்கு நீதி கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
முன்னதாக 2016ஆம் ஆண்டில், போலாவின் சகோதரர் இரண்டு அலுவலர்கள் மீது புகார் கொடுத்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போதுவரை நிலுவையில் உள்ளது.