மேற்கு வங்கத்தின் "ரெட் பிளஸ் மண்டலங்களை", அதிக கவனத்தோடு கண்காணிக்கப்படும் என்றும், தான் கட்டுப்பாட்டு அறையில் தங்குவதாகவும், புயல் கட்டுப்பாட்டு மையத்திற்குச் சென்ற அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தீவிரமடையும் ஆம்பன் புயல்: துரித தகவல்கள் உடனுக்குடன்... - ஆம்பன் சூறாவளி
10:03 May 20
அதிக கவனம் செலுத்தப்படும் - முதலமைச்சர் நம்பிக்கை
14:18 May 19
கனமழை எச்சரிக்கை! தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு
புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்கம், சிக்கிம், அஸ்ஸாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் 21ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக மேற்கு வங்கம், ஒடிசாவில் இந்த புயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் ஏற்படும் நிலைமையை சமாளிக்க பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். கடலோர கிராமங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர். ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி மேலும் நகர்ந்து, நாளை பகல் அல்லது மாலையில் மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் - வங்காளதேசத்தின் ஹதியா தீவுகள் இடையே கடந்துச் செல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
12:34 May 19
மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ள தடை
அதிபயங்கர புயலான ஆம்பன் நெருங்கி வருவதால், மே 20 வரை மேற்கு வங்கம், ஒடிசாவில் உள்ள அனைத்து மீன்பிடி நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
11:02 May 19
195 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும் - மத்திய அரசு எச்சரிக்கை!
ஆம்பன் புயல் தற்போது அதிதீவிர புயலாக மாறி வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. இது மே 20ஆம் தேதி மிகவும் கடுமையான சூறாவளி புயலாக உருவெடுத்து மேற்கு வங்கம் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அப்போது 195 கிலோ மீட்டர் வேகத்தில் அதிபயங்கர காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் ஆம்பன் புயல், மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் பெருத்த சேதங்களை ஏற்படுத்தும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஆம்பன் புயலால், மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
ஆம்பன் புயல் கரையை கடக்கும் முன் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, நேற்று அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். சூறாவளி செல்லும் பாதையில் உள்ள பகுதிகளில் இருந்து மக்களை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும், அத்தியாவசிய பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
09:28 May 19
பெரும்புயல் பட்டியலில் ஆம்பன் புயலும் சேர வாய்ப்புள்ளது!
ஆம்பன் புயல் ஒரு மான்ஸ்டர் போல உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் புயல் கடலில் இருக்கும்போது மிகவும் வலுவாக இருக்கும். ஒடிசா அருகே கரையைக் கடக்கும்போது வேண்டுமென்றால் வலிமை கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது. ஆனாலும் இந்தப் புயல் மான்ஸ்டர் போல இருக்கும். ஆம்பன் புயல் 915-925hpa (ஹெக்ட்டோபாஸ்கல்) வேகத்தில் இருக்கும். 940-950 hpa வேகம் வரை இது அடையக் கூடும். இதற்கு முன் வந்த புயல்கள் போலவே ஆம்பன் புயலும் வலிமையாக இருக்க வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
- 1999 ஓடிசா புயல் - 912 hPa
- 1990 ஆந்திரப் பிரதேசம் புயல் - 912 hPa
- 1991 வங்கதேச புயல்- 918 hPa
- 1977 ஆந்திரப் பிரதேச புயல் - 919 hPa
- 1963 வங்கதேச புயல் - 920 hPa
- 2007 கோனு புயல் - 920 hPa
- 2019 க்யார் புயல் - 922 hPa
- 1989 கே புயல்- 930 hPa
- 2001 குஜராத் புயல் - 932 hPa
- 2019 ஃபனி - 932 hPa
- கஜா புயல் - 976 hPa
- வர்தா புயல் - 975 hPa
- தானே புயல் - 969 hPa
இந்தப் பட்டியலில் பெரும்பாலும் ஆம்பன் புயலும் சேர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
12:55 May 18
உச்ச உயர் தீவிர புயலாக மாறியது 'ஆம்பன்'
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல், தற்போது உச்ச உயர் தீவிர புயலாக உருமாறி, வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னைக்கு கிழக்கே ஏறக்குறைய 650 கிமீ தொலைவில் மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடலில் புயல் மையம் கொண்டுள்ளது.
இதனால், தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்று அவ்வப்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிவருகிறது. மத்திய வங்கக் கடல் பகுதியில் அவ்வப்போது 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது.
12:12 May 18
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆம்பன் புயல் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று தீவிர புயலாக இருந்த ஆம்பன் இன்று அதித்தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் மேலும் தீவிரமாகி மே 20ஆம் தேதி மேற்கு வங்கம் - வங்காளதேசம் இடையே கரையை கடக்கிறது.
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆம்பன் புயல் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று தீவிர புயலாக இருந்த ஆம்பன் இன்று அதித்தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் மேலும் தீவிரமாகி மே 20ஆம் தேதி மேற்கு வங்கம் - வங்காளதேசம் இடையே கரையை கடக்கிறது.