கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்த ஊரடங்கு காரணமாக இணையப் பயன்பாடும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையும் கணிசமாக அதிகரித்துள்ளன. இந்நிலையில், கரோனாவால் மக்களிடையே எழுந்துள்ள அச்சத்தைப் பயன்படுத்தி ஒரே மாதத்தில் சுமார் நான்கு லட்சம் சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கரோனா குறித்து தகவல்களை அளிப்பது போன்ற நான்காயிரம் போலி தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பு, ஐநா உள்ளிட்ட அமைப்புகளிலிருந்து கோவிட்-19 குறித்த தற்போதைய தகவல்களை அனுப்புவதைப் போல ஹேக்கர்கள் மின்னஞ்சல்களை அனுப்புகின்றனர். இந்த மின்னஞ்சல்களில் இணைக்கப்பட்டுள்ள போலி லிங்குகளை பொதுமக்கள் க்ளிக் செய்தால், உடனடியாக அவர்களின் வங்கிக் கணக்கு, பாஸ்வேர்டு குறித்த தகவல்கள் ஹேக்கர்கள் கைக்குச் சென்றுவிடுகின்றன.
போலி இணைப்புகள் மூலம் ஹேக் செய்யும் முறை(Phishing scams) வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான் என்றாலும், கரோனா காலத்தில் இதுபோன்ற சைபர் தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இணையப் பணப்பரிமாற்றம் என்பது தற்போது வழக்கமாக நடைபெறும் ஒன்றாக மாறிவிட்ட நிலையில், அதையொட்டி நடைபெறும் சைபர் தாக்குதல்களும் கணிசமாக அதிகரித்துள்ளது.