குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் ஆகியோர் பயணம் செய்ய புதிய ரக போயிங்-777 ஏர் இந்தியா விமானம் டெல்லி வந்தடைந்துள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலிருந்து 15 மணிநேரம் இடைவிடாத பயணம் மேற்கொண்ட இந்த விமானம் தற்போது டெல்லியில் தரையிறங்கியுள்ளது.
புதிய வரவான இந்த வி.வி.ஐ.பி போயிங்-777 ஏர் இந்தியா விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் இயக்காது எனவும், இந்திய விமானப்படை அலுவலர்களே இயக்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு புதிய ரக விமானமங்களின் மதிப்பானது சுமார் 8,458 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் சிறப்பம்சங்கள்:
இந்தியா வந்தடைந்துள்ள இந்த விமானம், பிரதமரின் பயணத்திற்கு பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. முன்பிருந்த போயிங் ரக விமானம், முழு எரிபொருள் திறனுடன் 10 மணிநேரம் பயணம் செய்யவல்லது. ஆனால், இந்தப் புதிய ரக விமானம், இடைவிடாது 17 மணிநேரம் பயணம் செய்யும் திறன் கொண்டுள்ளது.
மேலும், பாதுகாப்புத் திறன் மேம்பாடுகளும் இந்தப் புதிய விமானத்தில் செய்யப்பட்டுள்ளன. ஏதேனும் ஏவுகணைகள் விமானத்தை தாக்கும்பட்சத்தில், அதனை முன்கூட்டியே அறிந்து, தடுத்து நிறுத்தும் திறனையும் இந்தப் புதிய ரக விமானம் கொண்டுள்ளது.
கடந்த ஜூன் 30, ஜூலை 30 ஆகிய தேதிகளில் இந்த விமானம் வரவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக விமானம் வருவதில் தாமதம் நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஹத்ராஸ் விவகாரம்: தடுப்பு காவலில் ராகுல், பிரியங்கா காந்தி