நுண்ணுயிரிகளுடன் ஒப்பிடும்போது வைரஸ்கள் அதிகப் பிறழ்வு ( பெருகும் தன்மை) விகிதத்தைக் கொண்டுள்ளன. மேலும் வைரஸ்கள் உடனுக்குடன் பெருகும் தன்மையையும் கொண்டுள்ளதால், இவற்றின் மரபணுப் பொருள்களும் மாற்றத்திற்கு ஆளாகிக் கொண்டே இருக்கும் தன்மையைக் கொண்டுள்ளன.
ஆகவே வைரஸ்களின் மரபணு வரிசை குறித்த தகவல்கள், வைரஸின் தோற்றம், இந்தியாவில் பரவும் வைரஸ்களின் தன்மை, அவை பரவும் விகிதம் உள்ளிட்டவை குறித்து நன்கு தெரிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் வகையில், சண்டிகரைச் சேர்ந்த சி.எஸ்.ஐ.ஆர் மைக்ரோபியல் டெக்னாலஜி நிறுவனம் (ஐஎம்டெக்) தன் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
முழு மரபணு வரிசை முறை என்பது, ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் மரபணுவின் முழுமையான டி.என்.ஏ வரிசையை தீர்மானிக்க உதவும் ஒரு முறையாகும்.
"இந்த ஆராய்ச்சியில் பெறப்படும் தகவல்கள் கரோனா தொற்றுக்கான மருந்தைக் கண்டறியவும், மருந்து கண்டறிவதற்கான பாதையை நோக்கி பயணிக்கவும் உதவும்" என சி.எஸ்.ஐ.ஆர் - ஐஎம்டெக் இயக்குநர் டாக்டர் சஞ்சீவ் கோஸ்லா தெரிவித்துள்ளார்.
மேலும், தங்கள் நிறுவனம் நுண்ணுயிர் மற்றும் மரபணு ஆராய்ச்சியில் ஏற்கனவே நிபுணத்துவம் பெற்றிருப்பதால், மருத்துவ மாதிரிகளிலிருந்து பெறப்பட்ட SARS-Cov-2 வைரஸின் ஆர்.என்.ஏ மரபணுவை வரிசைப்படுத்த உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உலக அளவில் 9000 வைரஸ் மாதிரிகளின் மரபணுக்கள் வரிசைப்படுத்தப்பட்டு, ஆராயப்பட்டு வரும் நிலையில், இந்த வைரஸின் தன்மை குறித்து இந்தியாவைச் சேர்ந்த சி.எஸ்.ஐ.ஆர் - ஐஎம்டெக் நிறுவனமும் ஆராய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :இறைச்சி சந்தைகளைச் சீனா ஒழுங்குபடுத்த வேண்டும் - முன்னாள் ஐநா சுற்றுச்சூழல் திட்ட செயல் தலைவர்