மேற்குவங்கத்தில் உள்ள ஐந்து மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இதில், நான்கு இடங்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு செல்லவுள்ளது. மீதமுள்ள ஒரு இடத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை களமிறக்கலாமா என அக்கட்சி ஆலோசித்துவருவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இடதுசாரி கட்சிகளுக்கு போதிய சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத காரணத்தால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைக் கோரவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், சீதாராம் யெச்சூரியை வேட்பாளராகக் களமிறக்கினால், காங்கிரஸ் கட்சி உறுதியாக ஆதரவு தெரிவிக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஒருவரை தொடர்ந்து இருமுறைக்கு மேல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கக் கூடாது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விதியாக உள்ளது.