டெல்லி:இந்தியா நான்காம் கட்ட பொது முடக்கத்தில் நகர்ந்துவருகிறது. இச்சூழலில் அதிகரித்து வரும் நோய்த் தொற்றுடையவர்கள் எண்ணிக்கையும், ஐந்து மாநிலங்களின் கரோனா இறப்பு விகிதமும் மத்திய அரசை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களிலும் 60 விழுக்காட்டிற்கும் அதிகமான கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இதில் மகாராஷ்டிரா 29 விழுக்காட்டுடன் முதலிடத்தில் உள்ளது.
இக்கூட்டத்தில் பூஷன், அனைத்து மாநிலங்களிலும் கோவிட்-19 பரிசோதனையை அதிகரிக்கவும், மருத்துவ மேலாண்மை நெறிமுறைகளை பின்பற்றவும் கேட்டுக் கொண்டதாக சுகாதார அமைச்சகத்தின் அலுவலர்கள் ஈடிவி பாரத்திடம் தெரிவித்தனர்.
ஆன்டிஜென் சோதனைகளை மேற்கொண்ட பிறகு பலருக்கு கரோனா அறிகுறிகள் இருப்பதாக இந்த மாநிலங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களை ஆர்.டி. பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் 24 மணிநேரத்தில் புதிதாக 90 ஆயிரத்து 123 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதன்மூலம் 50 லட்சத்து 20 ஆயிரத்து 359ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1,290 பேர் தொற்றுக்கு உயிரிழந்ததுள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 82,066-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 82,961 பேர் குணமடைந்தனர். இதில், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் இருந்து 59 விழுக்காடு பேர் குணமடைந்தனர். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 39 லட்சத்து 42ஆயிரத்து 360ஆக உள்ளது. மொத்த பாதிப்புடன் ஒப்பிடுகையில் இது 78.53 விழுக்காடாகும்.
மொத்த பாதிப்புடன் ஒப்பிடும்போது உயிரிழப்பு விகிதம் 1.63ஆகக் குறைந்துள்ளது. நாடு முழுவதும் 9 லட்சத்து 95 ஆயிரத்து 933 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது, மொத்த பாதிப்பில் 19.84 விழுக்காடாகும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) தகவலின்படி, செப்டம்பர் 15ஆம் தேதிவரை மொத்தம் 5 கோடியே 94 லட்சத்து 29 ஆயிரத்து 115 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில், செப்டம்பர் 15ஆம் தேதி மட்டும் 11 லட்சத்து 16 ஆயிரத்து 842 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.