நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் அறிகுறிகள் இருக்கும் நபர்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தி வைக்கப் படுகின்றனர்.இதுவரை, இந்தியாவில் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட எண்ணிக்கை கோடியைத் தாண்டவுள்ளது.
கரோனா பரிசோதனைகள் தனியார் மையத்தில் நடைபெறுவதற்கு, அரசு மருத்துவரின் பரிந்துரை கட்டாயமாக இருந்த நிலையில், தனியார் மருத்துவர்களும் கரோனா பரிசோதனைக்கு பரிந்துரைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த முடிவை மருத்துவ நிபுணர்களிடமும், மாநில அரசாங்க பிரதிநிதிகளுடனும் கலந்தாலோசித்த பின்னர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அலுவலர் கூறுகையில், "கரோனா பரிசோதனைக்கு பரிந்துரைக்க, தற்போது தனியார் மருத்துவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து COVID-19 சோதனை ஆய்வகங்களின் பயன்பாட்டை உறுதிபடுத்த மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, தனியார் துறைகளின் ஆய்வகங்களின் செயல்பாட்டை உறுதிசெய்வதின் மூலம், மக்களுக்குப் பெரும் நன்மை கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.
இதுமட்டுமின்றி கரோனா அதிகம் பாதித்த பகுதிகளில், வீடு வீடாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வகையில், சோதனை முகாம்கள் அமைப்பது, மொபைல் வேன்களை பயன்படுத்துதல் போன்ற அறிவுரைகள் மாநில அரசுக்கு சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.