உலக நாடுகளை மிரட்டிய கரோனா வைரஸ் இந்தியாவில் தன்னுடைய வருகையை ஆணித்தனமாக பதித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய,மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. முதல்கட்டமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் பல மாநிலங்களில் தற்போது வைரஸ் பரவல் இருப்பது உறுதியாகிவருகிறது. அந்தவரிசையில், தெலங்கானாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் எட்டிப்பார்க்கத் தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவிற்கு முன்பே மாநில எல்லைகளை மூடியும், மாநிலத்த்தில் 144 தடை உத்தரவையும் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் பிறப்பித்திருந்தார். இருப்பினும் மக்கள் கரோனா வைரஸ் அச்சமின்றி சாலைகளில் ஹாயாக சுற்றித்திரிந்தனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்தியாவில் எந்த மாநிலமும் அறிவிக்காத கடினமான முடிவை அசால்டாக அறிவித்தார். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது அத்தியாவசியத் தேவையின்றி சாலைகளில் சுற்றுபவர்களை கண்டதும் சுடவும் உத்தரவிட்டு அனைத்து மாநிலத்தினரையும் திரும்பிப் பார்க்கவைத்தார்.