கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாகப் பயணிகள் விமானச் சேவை மார்ச் இறுதி வாரத்தில் நிறுத்திக் வைக்கப்பட்டது. வெளிநாட்டில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க இயக்கப்படும் சிறப்பு விமானங்களுக்கும் சரக்கு விமானங்களுக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை முதல் உள்நாட்டு விமானச் சேவை மீண்டும் தொடங்கியது. இருப்பினும், நாடு முழுவதும் மருத்துவ கருவிகள் உள்ளிட்ட பலவகையான பொருள்களை பாதுகாப்பாகவும் விரைவாகவும் எடுத்துச் செல்ல விமானப் போக்குவரத்தே பயன்படுத்தப்படுகிறது. இதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்கூட சமீபத்தில் இந்திய விமான நிறுவனங்களை பாராட்டியிருந்தது.
இந்நிலையில், தனது மூன்று Bombardier Q400 ரக பயணிகள் விமானத்தைச் சரக்கு விமானங்களாக மாற்றியுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஜய் சிங் கூறுகையில், "எங்கள் சரக்கு விமான சேவை சிறப்பாக உள்ளது. தற்போதுள்ள தேவையைக் கருத்தில் கொண்டு மூன்று பழைய Bombardier Q400 ரக பயணிகள் விமானத்தைச் சரக்கு விமானங்களாக மாற்றியுள்ளோம்.