காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு இந்தியப் பொருளாதாரத்தை எப்படி அழித்து வருகிறது என்று ’நோட்பந்தி கி பாத்’ என்ற பெயரில் தொடர் காணொலிகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று (செப்.09) வெளியிடப்பட்டுள்ள காணொலியில், தேசிய அளவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்டுள்ள மோசமான விளைவுகளைப் பற்றி பேசியுள்ளார்.
அதில், ''திடீரென அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கு, அமைப்புசாரா தொழில்களுக்கு மரண தண்டனை போன்றது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 21 நாள்களில் கரோனா சூழலை முடிவுக்கு கொண்டு வருவோம் என உறுதியளித்தார்கள். ஆனால் அதற்கு பதிலாக கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளையும், சிறு, குறு தொழில்களையும் முடிவுக்குக் கொண்டுவந்து விட்டனர்.
அமைப்புசாரா தொழில்கள் மீது முன்னறிவிப்பில்லாமல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தினக்கூலிகள் பலரும் தினந்தோறும் சம்பாதித்து, ஒவ்வொரு நாளினையும் கடத்தி வருகிறார்கள். இந்த ஊரடங்கின் மூலம் அவர்கள் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
21 நாள்கள் தான் கரோனாவுக்கு எதிரான நடவடிக்கை இருக்கும் எனப் பிரதமர் உறுதியளித்தார். ஆனால் அந்த 21 நாள்களில் அமைப்புசாரா தொழில்களின் முதுகெலும்பை உடைத்து விட்டார்.
தேசிய ஊரடங்கின் போது 383 பேர் உயிரிழந்துள்ளனர். 20 முதல் 30 வயதுக்குள் இருக்கும் 2.7 கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சிறு தொகுப்புத் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என நாங்கள் பரிந்துரைத்தோம். அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும். அந்தப் பணம் இல்லாமல் அவர்களால் பணிகளைத் தொடர முடியாது.
ஆனால் இன்று வரை அவர்களுக்கு அரசு எதுவும் செய்யவில்லை. அதற்கு பதிலாக 15 முதல் 20 பணக்காரர்களின் கோடிக்கணக்கான வரிகளை தள்ளுபடி செய்தது.
தேசிய அளவிலான ஊரடங்கு என்பது கரோனா மீதான தாக்குதல் அல்ல. ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு கடைக்காரர்கள், எதிர்காலம் குறித்து சிந்திக்கும் இளைஞர்கள் மீதான தாக்குதல். இதனைப் புரிந்துகொண்டு, இந்தத் தாக்குதலுக்கு எதிராக நாம் நிற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நெருங்கும் பிகார் தேர்தல்; சூடுபிடிக்குமா புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்னை!