ஹைதராபாத்:உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர். சௌமியா சுவாமிநாதன், “கரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த, பொதுமுடக்கம் (lockdown) தற்காலிக நடவடிக்கை என்றும் கூறினார்.
மேலும், கரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முயற்சிக்கும் சில நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குறைந்த அளவிலேயே சோதனை நடைபெறுகிறது என்ற விகிதத்தையும் அவர் எடுத்துரைத்தார். வீடியோ கான்பரன்சிங் மாநாட்டில் கலந்துகொண்ட டாக்டர். சௌமியா சுவாமிநாதன் இது குறித்து மேலும் கூறுகையில், “கோவிட்-19 எதிரான தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில் உள்ளது. இதில் 28 பேர் முதல்கட்ட சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
ஐந்து பேர் இரண்டாம் கட்ட சோதனைக்கு செல்கின்றனர். உலகம் முழுக்க 150க்கு மேற்பட்டவர்கள் பரிசோதனைகளில் கலந்துகொண்டுள்ளனர். ஜெர்மனி, தைவான், தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடும் போது, இந்தியாவில் சோதனை விகிதங்கள் மிகக் குறைவாக உள்ளன. அமெரிக்கா கூட ஏராளமான மக்களைச் சோதித்து வருகிறது. எனவே நாம் சோதனையை அதிகரிக்க வேண்டும்.
போதுமான எண்ணிக்கையிலான சோதனைகள் இல்லாமல், வைரஸை எதிர்த்துப் போராடுவது "நெருப்பை கண்ணை மூடிக்கொண்டு போராடுவது" போன்றது. மேலும், மாவட்ட மருத்துவமனைகளில் கிடைக்கும் படுக்கைகள், தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள், அவசர சிகிச்சை பிரிவுகள் (ஐ.சி.யு) மற்றும் ஆக்ஸிஜன் விநியோகங்களை அரசாங்கங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.