கரோனா பரவலால் மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, திருமலை திருப்பதி உள்ளிட்ட நாட்டின் முக்கிய வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. ஆனால், பக்தர்களின்றி நாள்தோறும் பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டுவந்தன.
இச்சூழலில், தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளோடு கோயில்களைத் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதால், ஜூன் 11ஆம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு கட்டுபாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டது. குறைவான அளவில் மட்டுமே பக்தர்கள் வருகைதந்தனர்.
இருப்பினும், கோயில் திறந்த சில தினங்களிலேயே அங்கு பணிபுரிந்த 50 காவலர்கள் உள்பட 170க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அங்கு பணிபுரிந்த அர்ச்சகர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலோனார் குணமடைந்து வீடு திரும்பிவிட்டாலும், ஒருசிலர் மட்டும் உயிரிழக்கின்றனர்.
அந்த வகையில், திருப்பதி தேவஸ்தானத்தில் அர்ச்சகராகப் பணியாற்றிய சீனிவாசகார்லு (45) கரோனாவால் உயிரிழந்துள்ளார். நான்கு நாள்களுக்கு முன்பு உடலநலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
ஏற்கனவே அவருக்கு சர்க்கரை உள்ளிட்ட பிற நோய்கள் இருந்ததால் பெரும் அவதியுற்றார். அவரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் உயிரிழந்தார். இதற்கு முன்னதாக, 75 வயதான முன்னாள் அர்ச்சகர் சீனிவாச மூர்த்தி என்பவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். திருப்பதி அர்ச்சகர்கள் இருவர் அடுத்தடுத்து கரோனாவால் உயிரிழந்ததால் ஆந்திர மாநில மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.