மும்பையில் செயல்பட்டுவரும் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் அலுவலகம் மற்றும் ஸ்டுடியோ வடிவமைப்பதற்கான ஒப்பந்தம் கான்கார்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு கான்கார்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அன்வே நாயக், அவரின் தாயார் ஆகியோர் ராய்காட் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்டார்கள்.
அவரின் தற்கொலைக் குறிப்பில், தனது தற்கொலைக்கு காரணம் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிதான் காரணம் எனப் பெயரைக் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என அன்வே நாயக்கின் மகள் அதன்யா நாகய் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார். அவருடன் சேர்த்து ஃபெரோஸ் ஷாயிக், நிதீஷ் சர்தா ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர்.