கரோனா வைரஸால் உலகம் முழுவதும் பொதுமக்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கே திண்டாடி வருகின்றனர். இதனிடையே மார்ச் 15ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடந்த சார்க் மாநாட்டில், கரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கு உதவ வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.
இதனால் மாலத்தீவிற்கு உதவுவதற்காக இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 14 பேர் கரோனா வைரஸை எதிர்த்து போராட தேவையான ஆராய்ச்சி மையங்களையும், அந்த அரசின் மருத்துவர்களுக்கும் பயிற்சி வழங்கினர். அதேபோல் இந்த மாதத்தின் தொடக்கத்தில் 15 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் குவைத்திற்கு அனுப்பப்பட்டு உதவி செய்யப்பட்டது.