காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கிடைத்த தோல்வியைத் தொடர்ந்து, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, நீண்ட தாமதத்திற்குப் பின்னர், சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவரானார்.
இந்தச் சூழலில், 73 வயதாகும் சோனியா காந்தி உடல்நிலை கருதி, தீவிர அரசியலிலிருந்து விலகியிருக்கவே விரும்புகிறார். இதன் காரணமாக, நாட்டின் பழம்பெரும் கட்சியைத் தலைமைதாங்கப்போவது யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
கட்சியின் ஒரு தரப்பினர், ராகுல் காந்தி மீண்டும் தலைவராக வேண்டும் என்ற கோரிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். இ்ருப்பினும், நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரசுக்குத் தலைமை தாங்க வேண்டும் என்பதில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இதே கருத்தில் உடன்படுகிறார்.