சுமார் 42க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய டெல்லி கலவரம் குறித்து நாளை தொடங்கவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி மத்திய அரசிடம் விளக்க அறிக்கை கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இப்பிரச்னையை கையிலெடுத்து, நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என காங்கிரஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை குறிவைத்து காங்கிரஸ் தனது தாக்குதலை நடத்தும் எனவும், எதிர்க்கட்சிகளையும் இதுதொடர்பாக ஒன்றிணைக்கும் பணிகளை மேற்கொள்ளும் எனவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், இது குறித்து விவாதிக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. இதில் காங்கிரஸ் மூத்தத் தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஜெய்ராம் ரமேஷ், ஏ.கே. ஆண்டனி, அகமது பட்டேல், ஆனந்த் சர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உள்துறை அமைச்சர் பகுதியிலிருந்து அமித் ஷா விலக வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த விவகாரத்தை அரசியலாக்கி அதில் காங்கிரஸ் ஆதாயம் தேடுவதாக பாஜக சார்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதையும் படிங்க:ராமநாதபுரம் சரணாலயங்களில் 20 விழுக்காடு பறவைகள் அதிகரிப்பு