மாநிலங்களவைத் தேர்தலுக்கு முன்னதாக கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது பாஜக ஆளும் மணிப்பூரிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மொத்தமாக 60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில், தற்போது 59 பேர் மட்டுமே உள்ளனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரான ஷியாம் குமார் சிங், பாஜகவுடன் சேர்ந்ததால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் - 28, பாஜக - 21, தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) - 4, நாகா மக்கள் முன்னணி (என்.பி.எஃப்.) கட்சி - 4, லோக் ஜன சக்தி கட்சி - 1, திரிணாமுல் காங்கிரஸ் - 1, சுயேச்சை - 1 என்ற எண்ணிக்கையில் வெற்றிபெற்றிருந்தன.
எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், காங்கிரசிலிருந்து விலகிய ஏழு சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.
தங்கள் கட்சியிலிருந்து விலகிய ஏழு உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு கிடைக்கும் வரை, இந்த ஏழு உறுப்பினர்களும் எந்தவிதமான சட்டப்பேரவை நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பாஜகவுக்கு ஆதரவளித்த தேசிய மக்கள் கட்சி 4, திரிணாமுல் காங்கிரஸ் 1, சுயேச்சை ஆகிய 6 பேரும் பாஜக கூட்டணிக்கு அளித்த ஆதரவை திடீரென ஜூன் 17 திரும்பப் பெற்றுள்ளனர்.
மேலும், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூவர் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ள நிலையில், காங்கிரசில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளனர். இது மணிப்பூர் ஆளும் தரப்புக்கு அதிர்ச்சி அளித்தது. இதனால், பாஜக பெரும்பான்மையை இழந்து தடுமாறிவருகிறது.
தற்போது மணிப்பூர் சட்டப்பேரவையில் 52 இடங்கள் மட்டுமே இருப்பதால், ஆட்சியைக் கைப்பற்ற 27 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தால் போதுமானது என்ற நிலையில் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மணிப்பூர் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ஓக்ரம் இபோபி சிங், "நாங்கள் கூட்டணி அரசை அமைக்க முயற்சித்துவருகிறோம். அதனால், பாஜக ஆளும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிங், "பாஜகவிலிருந்து விலகிய மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் காங்கிரசில் இணைந்துள்ளனர். பாஜக கூட்டணியின் ஆதரவை விலக்கிக்கொண்ட தேசிய மக்கள் கட்சியின் நான்கு அமைச்சர்களுடன் தொடர்பில் உள்ளோம்.
பாஜக அரசுக்கு எதிராக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகர் யம்நம் கெம்சந்த் சிங்கிடம் கோரிக்கைவிடுத்துள்ளோம்" என்றார்.