மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. தேசிய கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள்வரை கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்திவருகின்றன. அம்மாநிலத்தில் தற்போது பாரதிய ஜனதா கட்சி-சிவ சேனா கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது.
210 தொகுதியை சுருட்டிவாரிய பாஜக
2014 பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைத்தது. பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக பதவி வகித்துவருகிறார்.
இந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. பாஜக கூட்டணியில் சிவசேனா தொடர்ந்து அங்கம் வகிக்கிறது. அதனால் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க இரு கட்சிகளும் வியூகம் வகுத்து பணியாற்றிவருகின்றன.
பாஜக-சிவசேனா (தேசிய ஜனநாயகக் கூட்டணி) தோல்விக்கு பொறுப்பேற்ற ராகுல் காந்தி
இதனிடையே, கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்த நிலையில், அக்கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி தோல்விக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், அக்கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பு வகித்துவருகிறார். மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்க அடுத்த வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் சவால் நிறைந்த மற்றும் பலம்வாய்ந்த கூட்டணியை ஏற்படுத்த தயாராகிவருகிறது.
சரத்பவாருடன் 'கை'கோர்த்த காங்கிரஸ்
அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக கவனம் பெற்ற செல்வாக்கு கொண்ட கட்சியாக விளங்கும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்துள்ளது. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இறுதிசெய்யப்பட்ட நிலையில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 125 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மீதமுள்ள 38 தொகுதிகள் பிற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி) முன்னதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சமீபகாலமாக நிர்வாகிகள் சிலர் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளில் இணைந்தது நினைவுகூரத்தக்கது.