கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் அதிக இடங்களை வென்றாலும், மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் குமாரசாமிக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது.
இருப்பினும் இந்த ஆட்சி "நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக" பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. எப்படியாவது ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி முதலமைச்சர் பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா விடாது முயற்சித்து வருகிறார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 10 பேரும், மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் 3 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர். அதில் 10 எம்எல்ஏக்கள் மும்பையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.